இலங்கையில் அரச–தனியார் பங்குடமை வணிகங்களை ஊக்குவிப்பதற்கும், அவற்றின் செயற்பாடுகளுக்கு வசதியளிப்பதற்கும் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச–தனியார் பங்குடமை வணிகங்களுக்கான தேசிய முகவராண்மையை நிறுவுவதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை உருவாக்கும் நோக்கில், 2025 ஜூன் 2ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்ட குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் சட்ட அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
இதன்படி, சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிட்டு, பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்குச் சமர்ப்பிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
