விரைவில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அதிரடி நடவடிக்கை..!




குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக பல புதிய சட்டங்கள் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நச்சுப்பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் திருத்தச் சட்டமூலம், 2007ஆம் ஆண்டின் புனர்வாழ்வுத் திருத்தச் சட்டமூலம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டங்கள் மற்றும் வீதிப் பாதுகாப்புச் சட்டமூலம் ஆகிய சட்டமூலங்களே இவ்வாறு முன்வைக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) நீக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குற்றவியல் நீதி அமைப்பில் உள்ள அனைத்து நிறுவனங்களும் வலுப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

டிரான்ஸ்பேரன்சி (Transparency) நிறுவனத்தின் 2013ஆம் ஆண்டின் அறிக்கையில் பொலிஸ் திணைக்களம் மிகவும் ஊழல் நிறைந்த நிறுவனமாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், அன்றைய அரசியல் சூழலே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீதித்துறைச் செயல்முறை தாமதமாகும் போது, நீதியை வழங்குவதும் தாமதமாகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வழக்கு விசாரணைகள் இழுபறியாகச் செல்வதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதுடன், குடும்ப வாழ்க்கையும் சீரழிந்து போவதாக அவர் கூறினார்.

"நீதிமன்ற அமைப்பில் சுமார் 11 லட்சம் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. 2021இல் 1,096,118 ஆக இருந்த வழக்குகளின் எண்ணிக்கை, தற்போது 1,122,118 ஆக உயர்ந்துள்ளது" என  ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

Post a Comment