எமனுக்கே உயிர் அச்சுறுத்தலா..!




வெலிசர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நதுன் சிந்தக விக்ரமரத்ன அல்லது 'ஹரக் கட்டா'வின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தி, சில குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களை மறைக்க முயற்சி நடைபெறுவதால், அவரது உயிரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு ஹரக் கடாவின் தந்தையான நெல்சன் மேர்வின் விக்ரமரத்ன இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

அவர் கடந்த 24 ஆம் திகதி செப்டம்பரில் ஆணைக்குழுவிடம் கையளித்த கடிதம் மூலமே இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தங்கல்லை பழைய சிறைச்சாலையிலிருந்து வெலிசறை சிறப்புத் தடுப்பு மையத்திற்கு தனது மகனை மாற்றியதன் மூலம், அவரது உயிருக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அச்சிறைக்கூடத்தில் தனது மகனின் எதிரிகளான 'கெஹெல்பத்தர பத்மே', 'பெக்கோ சமன்' மற்றும் 'பாணந்துறை நிலங்க' ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், தனது மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என நெல்சன் விக்ரமரத்ன தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, கடந்த 22 ஆம் திகதி ஹரக் கட்டாவுக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பத்மே காயமடைந்துள்ளார்.

இருப்பினும், இச்சம்பவத்திற்குப் பிறகு தனது மகனைச் சந்திப்பதற்கு குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது சட்டத்தரணிகளுக்கோ சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்றும் தந்தை குற்றம் சுமத்தியுள்ளார்

Post a Comment