நிலக்கரி பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இந்த ஆண்டின் இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலக்கரி பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவிடம் கடந்த 23 ஆம் திகதி புதன்கிழமை வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொண்டது
ஆணைக்குழு அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்
மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெதிகே மற்றும் மேல்நீதிமன்ற நீதிபதி சஞ்ஜீவ சோமரத்ன ஆகியோர், உச்சநீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க தலைமையிலான இந்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாகப் பணியாற்றுகின்றனர்
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற நிலக்கரி கொள்வனவுகள் தொடர்பான முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது
இதேவேளை, நடப்பு அரசாங்கம் இறக்குமதி செய்த நிலக்கரி தரமற்றது என நிரூபிக்கப்பட்டுள்ளதோடு, அதனை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் பாராளுமன்ற உரையொன்றின் வாயிலாக ஏற்றுக்கொண்டிருந்தார்.
இதனை தொடர்ந்து அதற்கு பொறுப்பான அமைச்சர் பதவி விலகியதோடு, அந்த நிலக்கரிக்காக வழங்கப்பட்ட நிதி பாரிய நட்டத்தை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ பொறுப்பற்ற வகையில் தொடர்ந்தும் பதிலளித்து வருவதோடு, குறித்த நட்டத்தை ஈடு செய்ய மின் கட்டணத்தில் அதிரிப்பை மேற்கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
