காட்டு யானைகளுக்கு உணவு கொடுத்தால் சட்ட நடவடிக்கை! சாரதிகளுக்கு எச்சரிக்கை

கதிர்காமம் - புத்தள வீதியில் உலவும் காட்டு யானைகளுக்கு உணவு வழங்கும் வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

காட்டு யானைகளுக்கு உணவு வழங்குவதன் காரணமாக, அவை வீதிக்கு அருகில் தங்கியிருப்பதற்கு பழகியுள்ளதால், இந்நிலைமையினால் வாகனங்களுக்கு காட்டு யானைகளால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது கதிர்காமம் - புத்தல வீதியில் சுமார் எட்டு காட்டு யானைகள் வாகனங்களை நிறுத்தி உணவு பெற்றுக்கொள்வதற்கு பழகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தினமும் 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இவ்வீதி வழியாக பயணிப்பதுடன், கதிர்காம யாத்ரீகர்கள் மட்டுமன்றி மொணராகலை, வெல்லவாய, பண்டாரவளை உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிக்கும் பெரும் எண்ணிக்கையிலான மக்களும் இவ்வீதியைப் பயன்படுத்துகின்றனர்.

வீதியில் தங்கியிருக்கும் காட்டு யானைகளுக்கு உணவு வழங்காத சந்தர்ப்பங்களில், அவை வாகனங்களைத்ாக்குவதற்கும் வாகனங்களைக் கவிழ்ப்பதற்கும் முற்படும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

சமீபத்தில் காட்டு யானை ஒன்று பேருந்து ஒன்றைத் தாக்கியதில், அப்பேருந்து கவிழ்ந்து சுமார் 40 பேர் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

கடந்த ஆறு வருட காலத்தில் காட்டு யானைகள் வாகனங்களைத் தாக்கியமையினால் மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஆண்டொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் காட்டு யானைகளின் தாக்குதல்களால் சேதமடைவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

யாள தேசிய பூங்காவின் மண்டலம் இரண்டிற்குட்பட்ட இவ்வீதி வழியாக பயணிப்பதற்கு மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், வாகனங்களில் இருந்து இறங்குவதும் வனவிலங்குகளுக்கு உணவு வழங்குவதும் சட்டவிரோதமான செயலாகும் என வனஜீவராசிகள் திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.

Post a Comment