பொதுமக்கள் அவசர காலத்தில் பொலிஸாரை விரைவாகத் தொடர்புகொள்வதற்காக, 'ஸ்ரீலங்கா பொலிஸ்' (Sri Lanka Police) என்ற புதிய கைப்பேசி செயலியை இலங்கை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தேசிய அடையாள அட்டை வைத்துள்ள அனைவரும் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மூலம் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
அவசர காலங்களில் இந்தச் செயலியில் உள்ள 'SOS' பொத்தானை தொடர்ந்து 10 வினாடிகள் அழுத்துவதன் மூலம், பயனரின் இருப்பிடத் தகவல் உடனடியாகப் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, பொலிஸார் விரைந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் செயலியை, பொய்ப் புகார்கள் அல்லது வேடிக்கைக்காகப் பயன்படுத்தக் கூடாது எனப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
119 அவசர இலக்கத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக கடந்த 2025-ஆம் ஆண்டில் 91-க்கும் மேற்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
