தேசிய மற்றும் மாகாண பாடசாலை ஆசிரியர்களுக்கான தகைமைப் பரீட்சை விதிகளில் பொதுச்சேவை ஆணைக்குழு முக்கிய சலுகைகளை அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பின் கீழ் புதிய திறன் தடைப் பரீட்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பழைய நடைமுறையின் கீழ் பரீட்சைகளை முடிக்க முடியாதிருந்த ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2022 ஒக்டோபர் 23 முதல் 2025 ஜூன் 30 வரை தரம் I-க்கு தரம் உயர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு 3 ஆம் திறன் தடைப் பரீட்சையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே தரம் உயர்த்தப்பட்ட அதிகாரிகள், தங்களின் அடுத்த தர உயர்வுக்கு முன்னரான திறன் தடைப் பரீட்சையை நிறைவு செய்யும் நிபந்தனையுடன், முந்தைய பரீட்சைகளிலிருந்தும் விலக்கு பெறுகின்றனர்.
இது தொடர்பான முழுமையான கல்விச் சுற்றுநிருபம் விரைவில் வெளியிடப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
