கொழும்பு செட்டியார் தெருவில் களவு நகை தொடர்பான விசாரணையின்போது, பொலிஸாருக்கு மொழிபெயர்த்து உதவ முயன்ற இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொழிப்பிரச்சினை காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே தகவல்களை புரிய வைக்க முயன்ற ஜீவா என்ற இளைஞரை மூன்று பொலிஸார் தாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்த நிலையில், அருகிலிருந்தவர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் மற்றும் நகை வியாபாரிகள் செட்டியார் தெருவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தாக்குதலில் ஈடுபட்ட பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
