கொழும்பில் நடைபெற்ற “வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வசிக்கும் நாடுகளிலிருந்தே வாக்களித்தல் – OCV 2026” தொடர்பான பிராந்திய மாநாட்டில் உரையாற்றிய பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின் வாக்குரிமை தொடர்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் நம்பிக்கையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
மாநாட்டின் விருந்தினர் வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், எதிர்காலத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளிலிருந்தே வாக்களிக்கும் வகையிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது, வெளிப்படைத்தன்மைக்கும் பொதுமக்களின் நம்பிக்கைக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் பெருமளவான இலங்கையர்கள் வசித்து வருவதாகவும், அவர்களின் நாட்டுடனான உறவு புவியியல் எல்லைகளைக் கடந்து தொடர்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் தங்களது குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத்துடன் தொடர்ந்து நெருக்கமாகப் பிணைந்துள்ள நிலையில், அவர்களின் வாக்குரிமையை உறுதி செய்வதற்கான எதிர்கால நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் நம்பிக்கைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், ஏனைய நாடுகளின் அனுபவங்களில் இருந்து இலங்கை கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் பல உள்ளதாகவும், சர்வதேச தேர்தல் நடைமுறைகளை ஆராய்வதன் மூலம் உலகளாவிய சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப இலங்கையின் தேர்தல் சட்டக் கட்டமைப்பை மேம்படுத்த இந்த மாநாடு முக்கிய பங்களிப்பை வழங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
