வறுமையில் சாதனை படைக்கும் அரசாங்கம் - வருமானத்தில் சாதனை படைக்கும் சுங்கம்

2026 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை சுங்கத்தின் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 1,060,559 மில்லியன் ரூபாவாகும். எனினும், அக்காலப்பகுதியில் 1,379,084 மில்லியன் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக சுங்கப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தின் வழிகள் மற்றும் முறைகள் பற்றிய குழுவின் முன்னிலையில் இலங்கை சுங்கத்தின் வருமானம் உள்ளிட்ட நடவடிக்கைகள் அண்மையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டபோதே அதிகாரிகள் இத் தகவல்களை வெளிப்படுத்தினர்.

இதன்படி, எதிர்பார்க்கப்பட்ட வருமானத்துடன் ஒப்பிடுகையில் இது 130 சதவீத முன்னேற்றமாகும். மேலும், இந்த ஆண்டின் ஒவ்வொரு மாதத்திலும் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு மாதமும் உயர் வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாகவும் சுங்க அதிகாரிகள் இக்குழுவிடம் சமர்ப்பித்த தரவுகள் காட்டுகின்றன.

வாகன இறக்குமதி மூலம் கிடைத்த வருமானம்

2026 ஆம் ஆண்டின் வாகன இறக்குமதி தொடர்பிலான தரவுகளை சமர்ப்பித்த அதிகாரிகள், 2026 ஜூன் 30 ஆம் திகதி வரை 316,000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர். இதன் மூலம் 512,547 மில்லியன் ரூபா வரி வருமானமாகக் கிடைத்துள்ளது.

இதில் அதிகபட்ச வரி வருமானமான 386,726 மில்லியன் ரூபா மோட்டார் கார்களின் இறக்குமதி மூலமே ஈட்டப்பட்டுள்ளது.

அத்துடன், அதிக சுங்க வருமானத்தைப் பெற்றுத் தந்த பொருட்களின் பட்டியலில் 1000cc க்கும் குறைவான எஞ்சின் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் மோட்டார் கார்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. இவற்றின் மூலம் 137.4 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதுடன், இது மொத்த வருமானத்தில் 9.96 சதவீதமாகும் என்றும் நாடாளுமன்றக் குழுவில் வெளிப்படுத்தப்பட்டது.

மேலும், இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கை மற்றும் அவை பரிசோதிக்கப்படும் முறைகள், இலங்கை சுங்கத்தின் நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுக்க நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், வருமான நிர்வாகத்தில் உள்ள சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

Post a Comment