சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் படகுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட மட்டத்தில் குழுக்களை நிறுவுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், மன்னார் உள்ளிட்ட 15 மீன்பிடி மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் மாவட்டக் குழுக்கள் நிறுவப்படவுள்ளன.
இக்குழுக்களின் இணைத் தலைவர்களாக மீன்பிடி பணிப்பாளர் நாயகம் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மாவட்ட செயலாளரும் பணியாற்றுவர்.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் பாராளுமன்ற வளாகத்தில் மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இக்குழுவானது மாவட்ட செயலாளர், உதவி பணிப்பாளர் (மீன்பிடி), மீன்பிடி அமைச்சரால் நியமிக்கப்பட்ட மீன்பிடி ஒருங்கிணைப்பு அதிகாரி, மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள், இலங்கை பொலிஸ், கடற்படை, கடலோரப் பாதுகாப்புப் படை மற்றும் நீர்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகாரம் (NAQDA) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக அமையும்.
தேவை ஏற்படும் பட்சத்தில், தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையத்தின் (NARA) அல்லது பிற தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளையும் இக்குழுக்களில் இணைத்துக் கொள்வதற்கு இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, கிழக்கு மாகாணக் கடல் பகுதிகளில் இடம்பெறும் மீன் கொள்ளைகளைத் தடுப்பது எவ்வாறு மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏற்படும் விபத்துகளைத் தவிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் யாவை என்பது குறித்தும் இதன்போது மேலதிக அவதானம் செலுத்தப்பட்டது.