எதுல்கோட்டையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அரசாங்கத்தின் சட்ட அமலாக்க நடவடிக்கைகளில் காணப்படும் இரட்டை நிலைப்பாடுகளை சட்டத்தரணி யோஹான் அரியவன்ச கடுமையாக விமர்சித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் 'ஐஸ்' போதைப்பொருள் அடங்கிய இரு கொள்கலன்களைக் கைப்பற்றிய பொலிஸ் அதிகாரிகளுக்குத் திடீரென இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகச் சாடிய அவர், போதைப்பொருளைப் பிடித்த அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்குவது ஏன் என கேள்வி எழுப்பினார்.
அதேவேளை, 323 கொள்கலன்கள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சுங்கப் அதிகாரிகளுக்கு உயர்பதவிகளும் சலுகைகளும் வழங்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
தரமற்ற 19 நிலக்கரி கப்பல்கள் வருகை தந்தது மற்றும் திறைசேரியின் நிதி காணாமல் போனமை குறித்தும் அரசாங்கம் பாரபட்சமின்றி உடனடி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
செப்டம்பர் 21-க்கு முன்னரும் பின்னரும் இடம்பெற்ற அனைத்து ஊழல்களுக்கும் எதிராகச் சட்டம் ஒரே மாதிரியாகப் பாய வேண்டும் என்றும், ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் உண்மைக்காகவே குரல் கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.
