இலங்கை–சீனா உறவில் புதிய திட்டங்கள்! AI பேரிடர் எச்சரிக்கை முதல் தூய்மையான குடிநீர் வரை முக்கிய பேச்சு


இலங்கைக்கான புதிய சீனத் தூதர் வேய் ஹுவாஷியாங் மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு கொழும்பில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, பொது நிர்வாக மறுசீரமைப்பு, உள்ளூராட்சி நிறுவனங்களின் திறன் மேம்பாடு, பேரிடர் மேலாண்மை, தூய்மையான குடிநீர் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக, AI அடிப்படையிலான வானிலை மற்றும் பேரிடர் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் சீனத் தூதர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், பேரிடர் காலங்களில் இலங்கைக்கு உடனடி தொழில்நுட்ப உதவி மற்றும் அவசர நிவாரணங்களை வழங்குவதற்கான சிறப்பு பொறிமுறையை உருவாக்குவது குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.

அத்துடன், இலங்கையின் அரச அதிகாரிகளுக்கு சீனாவில் மேல்நிலைக் கல்வி மற்றும் நடைமுறைப் பயிற்சிகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் நிலவும் தூய்மையான குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கான சீன தொழில்நுட்ப உதவிகள்குறித்தும் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதுடன், எதிர்காலத்தில் தொழில்நுட்பம், நிர்வாகம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் இணைந்து செயல்படுவதற்கும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

Post a Comment