எரிபொருள் விலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கையிலுள்ள தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட மேல் மற்றும் கீழ் வரம்பிற்குள் தங்களுக்கான எரிபொருள் விலைகளைத் தாங்களே நிர்ணயித்துக் கொள்வதற்கு அனுமதிப்பது தொடர்பான சட்ட சாத்தியக் கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் டீசல் மானியம் நீக்கப்பட்டமையால் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, லங்கா ஐ.ஓ.சி (LIOC), சினோபெக் (Sinopec) மற்றும் ஆர்.எம் பார்க்ஸ் (RM Parks) ஆகிய நிறுவனங்கள் டீசல் விநியோகத்தை சுமார் 50 சதவீதம் வரை குறைத்துள்ளன.

இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

எரிபொருள் இறக்குமதிச் செலவுகளின் அடிப்படையில் செப்டம்பர் மாத இறுதியில் அரசாங்கத்தின் வழக்கமான மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள போதிலும், ஏற்கனவே அதிக விலையால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோரால் மேலதிக விலை உயர்வைத் தாங்க முடியுமா என்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுவதைத் தவிர்க்கவும், டீசல் விநியோகத்தைச் சீராகப் பேணவும் அரசாங்கம் உரிய தீர்மானங்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment