மிக் விமான கொள்வனவில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி வழக்கில் ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஜனவரி 6ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த வழக்கில் சந்தேகநபரான ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று (02) நீதிமன்றத்தில் முன்னிலையானதை அடுத்து, கோட்டை நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சந்தேகநபர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதனால், அதற்கான அவசியமான பணிகளுக்காக வெளிநாடு செல்லவேண்டிவுள்ளதால், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இதற்கமைய, சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணத் தடையை அடுத்த வழக்குத் திகதி வரை தற்காலிகமாக நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறித்த வழக்கு சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதால், மேலதிக விசாரணைக்காக மற்றொரு தினத்தை வழங்குமாறு விசாரணை அதிகாரிகளால் கோரப்பட்டுள்ளது.
