சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பிரஜை! அனோஜனை காப்பாற்ற அவசர கோரிக்கை

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றி, அவரை மீண்டும் தாய்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு கோரி கொழும்பில் இன்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

இலங்கை இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், இனம், மதம், மொழி மற்றும் அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி இலங்கையர்களாக ஒன்றிணைந்து அனோஜனின் விடுதலைக்காக குரல் கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அனோஜனின் பெற்றோரை இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதியும் சந்தித்து, அவரை பொதுமன்னிப்பில் விடுவிப்பதற்கான சட்ட மற்றும் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த இராஜதந்திர முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கும் வகையிலேயே பொதுமக்கள் மத்தியில் இந்த மனிதாபிமான குரல் எழுப்பப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அதேவேளை, சவுதி அரேபியாவின் சட்ட அமைப்பை மதிப்பதாக தெரிவித்த ஏற்பாட்டாளர்கள், சவுதி மன்னரும் அந்நாட்டு தலைமையும் மனிதாபிமான அடிப்படையில் கருணை காட்டி அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும், இலங்கையின் 25 மாவட்டங்களிலும் பொதுமக்கள், மத ஸ்தாபனங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் அமைதியான முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டம், பிரார்த்தனைகள் மற்றும் கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டம் எந்தவொரு நாட்டிற்கும் அல்லது மதத்திற்கும் எதிரானது அல்ல என தெரிவித்த ஏற்பாட்டாளர்கள், உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும் வெறுப்புப் பிரசாரங்களையும் சமூக ஊடகங்களில் பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டனர்.

கொழும்பில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை இந்து அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் ஹரி கதிர்காமர், செயலாளர் கலாநிதி என். கே. எஸ். திருச்செல்வம், ஒருங்கிணைப்பாளர் ராஜூ பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Post a Comment