உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை, கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று அறிவிக்கத் தொடங்கியுள்ளது.
23,270 குற்றச்சாட்டுகள் அடங்கிய இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், நண்பகல் 12.30 மணியளவிலேயே தீர்ப்பு வாசிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
தீர்ப்பை வாசிப்பதற்கு முன்னர், நீதிபதிகள் குழாத்தின் தலைவர் நவரத்ன மாரசிங்க, தீர்ப்பை அச்சிடுவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்காக அனைத்து தரப்பினரிடமும் நீதிமன்றம் தனது வருத்தத்தையும் தெரிவித்தது.
பின்னர் தீர்ப்பு வாசிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மதிய போஜன இடைவேளைக்காக தற்போது நீதிமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் நவரத்ன மாரசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஷங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்ப்பை அறிவித்து வருகிறது.
