குற்றங்களை குறைக்காமல் சிறையில் நெரிசலை குறைக்க முயற்சிக்கும் அரசாங்கம்

 இலங்கைச் சிறைகளில் காணப்படும் கடுமையான நெரிசலைக் குறைப்பதற்காக, விளக்கமறியலில் உள்ள சந்தேகநபர்களின் இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளை விரைவாகப் பெற்றுக்கொடுத்தல் உட்பட பல முக்கிய நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் நஜித் இந்திக தலைமையில் கூடிய 'அரசு நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு'க் கூட்டத்தின் போதே இது குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

தண்டனை பெற்ற கைதிகளை விட, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் எண்ணிக்கையே சிறைச்சாலை நெரிசலுக்குக் முக்கிய காரணியாக உள்ளது.

குறிப்பாக போதைப்பொருள் வழக்குகளில் கைதாகும் சந்தேகநபர்களுக்கான இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமாவதால், அவர்களால் பிணை பெற முடியாமல் நீண்ட காலம் சிறையில் இருக்க வேண்டியுள்ளது. 

சிலர் 18 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை இந்த அறிக்கைகள் இன்றி விளக்கமறியலில் உள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

சிறு அளவிலான போதைப்பொருள் குற்றங்களுக்காகக் கைதாகும் அடிமையானவர்களை நேரடியாகச் சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, மருத்துவப் பரிசோதனைக்குப் பின் மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்புவதற்கான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Post a Comment