சவூதியில் மரண தண்டனை அச்சுறுத்தலில் அனோஜன்: களத்தில் இறங்கிய சஜித் பிரேமதாச!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பிலுள்ள தமது அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.   

இந்த சந்திப்பில் அனோஜனின் பெற்றோர் மற்றும் சகோதரன் கலந்துகொண்டு, அனோஜனை விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினர்.   

மேலும் சவூதி தூதருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட சஜித் பிரேமதாச, அனோஜனின் தற்போதைய நிலை மற்றும் அவரை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துக் கேட்டறிந்தார். 

அத்துடன், சவூதி சிறையிலுள்ள அனோஜனுடனும் நேரடியாகப் பேசி அவரது நலனை விசாரித்ததோடு, வெளியுறவுச் செயலாளருடனும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்துப் பேசினார்.   

இனம், மத வேறுபாடின்றி அனோஜனை மீட்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாக சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். 

இதனிடையே, இராஜதந்திர வழிகளில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், மரண தண்டனை குறித்த செய்தியை இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment