யுத்தம், சுனாமி, கொவிட்-19 மற்றும் பொருளாதார நெருக்கடி, இலங்கை மக்கள் சந்தித்த தொடர் அசாதாரண சூழ்நிலைகள், அவர்களின் மனதளவில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியுள்ளதாகப் புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
கேரள பல்கலைக்கழகத்தின் மிதிலைமாறன் தெய்வந்திரன் நடத்திய இந்த ஆய்வில், 2010 முதல் 2025 வரையான காலப்பகுதியில் வெளியிடப்பட்ட 25 ஆய்வறிக்கைகள் ஆராயப்பட்டுள்ளன.
பேரழிவுகள் வெறும் உயிரிழப்புகளை மட்டுமல்லாமல், வீடுகள், வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பையும் பறித்துள்ளதாக இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பாதிப்புகளைச் சந்தித்த மனிதர்களுக்கு, டிட்வா புயல் போன்ற புதிய இயற்கை அசம்பாவிதங்கள் ஏற்படும் போது, பழைய கசப்பான நினைவுகளும் பயமும் மீண்டும் மேலெழுகின்றன.
இதனால் மன அழுத்தம், பயம் மற்றும் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கின்றது.
எனவே, பேரழிவு நிவாரணங்களின் போது வெறும் பொருட்கள் வழங்குவதோடு நின்றுவிடாமல், நீண்டகால மனநல ஆலோசனைகளையும், சமூக அடிப்படையிலான ஆதரவு அமைப்புகளையும் கட்டியெழுப்ப வேண்டும் என இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
