அனோஜனனையும் ஞானசார தேரரையும் பொது மன்னிப்பில் விடுவிக்க வேண்டும்




வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி 50 லட்சம் கையெழுத்துக்களைப் பெறும் விசேட திட்டம் இன்று (26) மிகிந்தலை புனித பூமியில் ஆரம்பமானது.

மிகிந்தலை ராஜமகா விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி வலவாஹெங்குணவெவே தம்மரதன தேரர், மகா சங்கத்தினர் உள்ளிட்ட பலர் இந்த மகஜரில் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த மிகிந்தலை விகாராதிபதி தேரர், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் விசேட கோரிக்கை ஒன்றையும் விடுத்தார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, முன்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.

எனினும், அந்த தீர்மானம் சட்டத்திற்கு புறம்பானது மற்றும் செல்லுபடியற்றது என உயர்நீதிமன்றம் கடந்த 10ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தது.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த மிகிந்தலை விகாராதிபதி தேரர்,

'அனோஜன் என்ற இந்து சகோதரருக்கு மரண தண்டனை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிங்கள, தமிழ், பௌத்த துறவிகள், கன்னியாஸ்திரிகள் மற்றும் அனைத்து மதத் தலைவர்களும் அவருக்கு குறைந்தபட்ச தண்டனையை வழங்கி எமது நாட்டிற்கு நாடு கடத்துமாறு கூறுகின்றனர்.

உலகிற்கு முதன்முதலில் அபயமளித்தல் (மன்னிப்பு) பற்றி கூறியது இந்த புனித பூமியிலாகும். 

இந்த அபயமளிக்கப்பட்ட இடத்தில் இருந்து, வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

நாங்கள் இதற்காக கையெழுத்துக்களைப் பெற்று, மகாநாயக்க தேரர்களிடம் வழங்கி, பின்னர் அந்த கையெழுத்துப் படிவத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்போம்' எனத் தெரிவித்தார்.


Post a Comment