பானுதுறை, நல்லுருவ பகுதியில் அமைந்துள்ள சொகுசு மூன்று மாடி வீடு ஒன்றை பொலிஸார் நேற்று மாலை (25) சோதனையிட்டனர்.
'DJ சாது' என அறியப்படும் பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரால் வாடகைக்கு எடுக்கப்பட்ட இந்த வீடு, போதைப்பொருள்களை பொதி செய்யவும், விநியோகிக்கவும் மற்றும் அவற்றிற்கான லோகோக்களை அச்சிடவும் பயன்படுத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
மொத்த விநியோகத்திற்காக மாதிரிப் பொட்டலங்களாகத் தயாரிக்கப்பட்ட 5 சிறிய ஹெரோயின் பொதிகள் இதன்போது கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பொதி செய்யப் பயன்படுத்தப்படும் அச்சிடப்பட்ட தாள்கள், அச்சிடுவதற்கான சிறப்புத் தாள்கள் மற்றும் தாள் வெட்டும் இயந்திரம்,
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமரா அமைப்பின் நினைவக அட்டைகள் 3 கைப்பேசிகள் மற்றும் தங்க நிற ஆபரணங்கள் என்பனவும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
(கைப்பற்றப்பட்ட தங்க நிற ஆபரணங்கள் சோதிக்கப்பட்டதில் அவை போலியானவை எனத் தெரியவந்ததையடுத்து, சந்தேகநபரின் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டன)
குறிப்பிட்ட வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தபோதிலும், அது எப்போதும் பூட்டப்பட்டே காணப்பட்டதால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அளித்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பானுதுறை குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் ரோஹன் விஸ்வநாத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் பானுந்துறை நீதவான் நீதிமன்றில் தேடுதல் பிடியாணை பெற்று இச்சோதனையை மேற்கொண்டனர்.
வெளிநாட்டில் இருந்து இயங்கும் 'குடு சலிந்து' என்ற பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரின் நெட்வொர்க்கை நிர்வகிக்கும் 'ரந்திக' என்பவருடன் 'DJ சாது' நேரடித் தொடர்பில் இருந்துள்ளார்.
இவர் தனது கள்ளக்காதலியுடன் சேர்ந்து இந்த வீட்டை மாதம் 70,000 ரூபாவிற்கு வாடகைக்கு எடுத்து இயங்கி வந்துள்ளது தெரியவந்துள்ளது.
வீட்டின் ஒரு அறையில் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் நேரடித் தொடர்பைப் பேணுவதற்குப் பெரிய திரைகள் மற்றும் நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தன.
மேலும், வீடு முழுவதும் பொருத்தப்பட்டிருந்த சீசி ரீவி கேமராக்கள் கைப்பேசி மூலம் தொலைவிலிருந்து கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன.
தற்போது சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டு பானுந்துறை குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
