மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.
பனிச்சங்குளத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வசித்து வந்த இந்தத் தம்பதி, நேற்று காலை (24) கூரிய ஆயுதத்தால் பலத்த காயங்களுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த இருவரும் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் பனிச்சங்குளம், மாங்குளம் பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் மற்றும் 70 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலைகளுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, சந்தவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் நபர் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்பத் தகராறு காரணமாகவே இந்தக்கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
