22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை அதிகரிப்பதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த மாற்றம் எவ்வாறு, எந்த நடைமுறையின் ஊடாக கொண்டுவரப்படுகிறது என்பதில்தான் தமது கேள்வி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் பெருமளவிலான வழக்குகள் தேங்கியுள்ள நிலையில், நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பது மட்டுமே அதற்கான முழுமையான தீர்வாகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், தேவையான வளங்களை வழங்கி நீதித்துறை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் எனவும் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அரசாங்கங்கள் மாறும்போது நீதித்துறையின் விதிமுறைகளும் மாற்றப்படும் நிலை உருவாகக்கூடாது என தெரிவித்த அவர், நீதித்துறையின் சுயாதீனம், நிலைத்தன்மை மற்றும் மக்கள் நம்பிக்கை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உச்ச நீதிமன்றம், மக்கள் வாக்கெடுப்பு தேவையில்லை என்றும், நாடாளுமன்றத்தில் தேவையான பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் தீர்மானித்துள்ளது.
