“ஜனநாயக வரலாற்றில் கறுப்பு நாள்” – ரஞ்சித் மத்தும பண்டார கடும் சாடல்

இன்றைய தினம் நாட்டின் ஜனநாயக வரலாற்றில் ஒரு கறுப்பு நாள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கடுமையாகச் சாடியுள்ளார்.

இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நாட்டின் ஜனநாயகம் முற்றாக அழிக்கப்பட்டு, நீதித்துறையின் சுயாதீனத்தன்மை சீர்குலைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தினார்.

மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் எனப் பலரும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில், அரசாங்கத்திலுள்ள 159 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியும் மட்டுமே இத்திருத்தத்திற்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்திற்கு அருகில் தங்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் முற்றிலும் ஜனநாயக வழியிலானது எனக் குறிப்பிட்ட அவர், ஜே.வி.பி கடந்த காலத்தில் நாடாளுமன்றத்தின் மீது குண்டுவீசியதையும் தீ வைக்க முயன்றதையும் இதன்போது நினைவூட்டினார்.

நாட்டின் ஜனநாயகத்தையும் நீதித்துறையின் சுயாதீனத்தையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும், எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.

Post a Comment