சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுமி ஒருவர், “என்னை காப்பாற்றுங்கள்” என கூச்சலிட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் அந்த ஆட்டோவை மடக்கிப்பிடித்து சிறுமியை மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சிறுமியிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாகக் கூறி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களை சென்னைக்கு அழைத்து வந்து, ராமாபுரத்தில் உள்ள பங்களா ஒன்றில் அடைத்து வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பொலிஸார் சம்பந்தப்பட்ட பங்களாவில் அதிரடி சோதனை நடத்தி, சிறுமிகள் உள்ளிட்ட சுமார் 10 பெண்களை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில் வங்கதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கும்பலின் தலைவி என சந்தேகிக்கப்படும் பெண் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சென்னையில் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறப்படும் 5 பேரையும் பொலிஸார் கைது செய்து, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
.jpg)