இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கமான Ceylon Automobile Importers Association (CAIA) ஏற்பாடு செய்த “Motor Rally 2026” வாகனக் கண்காட்சி பேரணி இன்று (16) கொழும்பு Port City வளாகத்தில் ஆரம்பமானது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்அவர்கள் கலந்து கொண்டார்.
சமூகத்தில் பொறுப்புணர்வுமிக்க வாகனப் பயன்பாட்டு கலாசாரத்தையும், சுயக்கட்டுப்பாட்டுடன் கூடிய வாகனம் செலுத்தும் பழக்கத்தையும் உருவாக்குவதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். வெறுமனே சட்டங்களையும் விதிமுறைகளையும் பின்பற்றுவதுடன் மட்டுப்படாமல், பரஸ்பர மரியாதையுடன் வீதிகளைப் பயன்படுத்தும் கலாசாரத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கும் இந்நிகழ்வு முக்கியத்துவம் அளிக்கிறது.
இந்த வாகனப் பேரணியின் மூலம் வாகனத் துறையில் அறிமுகமாகி வரும் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய போக்குகளை பொதுமக்கள் நேரடியாகக் காணும் வாய்ப்பைப் பெறுகின்றனர் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வலுப்பெற்று வருவதையடுத்து வாகன இறக்குமதி மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் ஒவ்வொரு குடிமகனும் வாகனத்தைப் பயன்படுத்தக்கூடிய சாதகமான சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த நிலைமை முடிவுக்கு வந்தவுடன், தற்போது நடைமுறையில் உள்ள தற்காலிக வரி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
சிறிய ரக வாகனங்கள் முதல் அதிநவீன சொகுசு மற்றும் உயர் செயல்திறன் கொண்ட மோட்டார் வாகனங்கள் வரை பல்வேறு வகையான வாகனங்கள் பங்கேற்ற “Motor Rally 2026” பேரணி, கொழும்பு Port City வளாகத்தில் இருந்து ஆரம்பமாகி Water’s Edge வரை பயணித்தது.





