பிடல் காஸ்ட்ரோவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு சோசலிச இளைஞர் சங்கத்தின் விசேட நினைவேந்தல் நிகழ்வு

 பிடல் காஸ்ட்ரோவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, சோசலிச இளைஞர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "நூற்றாண்டு கண்ட புரட்சி ஒளி - பிடல்" எனும் சிறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி, இலங்கை மன்றம் கேட்போர் கூடத்தில் இன்று (16) நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு இணையாக, பிடல் காஸ்ட்ரோவின் புரட்சிப் பயணத்தை விளக்கும் புகைப்பட மற்றும் ஓவியக் கண்காட்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான கியூபா தூதுவர் பட்ரிசியா பெகோ குவேரா மற்றும் ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

அங்கு உரையாற்றிய ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, பிடல் காஸ்ட்ரோவின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளதாகத் தெரிவித்தார். கியூபா மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக, அந்நாட்டு மக்கள் இன்று மிகவும் கடினமான கால கட்டத்தைக் கடந்து வருகின்ற போதிலும், உணவு, மருந்து, எரிபொருள் போன்ற கடுமையான பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும் கியூபா மக்கள் தாங்கள் வென்றெடுத்த சுதந்திரத்தை ஒருபோதும் காட்டிக்கொடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு நாட்டில் புதிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தி, ஒரு புதிய பாதையில் பயணிக்கும்போது, மக்கள் தாங்கள் பெற்றெடுத்த வெற்றிகளையும் உரிமைகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இலங்கையிலும் ஒரு சமூக மாற்றத்திற்காகத் தேர்தல்கள் மூலம் மக்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை வழங்கி ஆட்சியை மாற்றியுள்ளதாகவும், ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியை மக்கள் தங்கள் வாக்களிப்பின் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போதைய சமூகத்தில் முறையான கொள்கைகள் எதுவும் இல்லை எனக் சுட்டிக்காட்டிய அவர், அரசியலுக்கு வரும் பலர் புகழுக்காகவும், சலுகைகளுக்காகவும், அதிகாரத்தின் மீதான பேராசையினாலும் ஊழல்வாதிகளாக மாறுவதாகக் கூறினார். இன்றைய சமூகத்தில் சிலர் செய்யும் சிறிய உதவிகளைக்கூட விளம்பரத்திற்காக முகநூலில் பதிவிடும் நிலை உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவின் பெயரில் எந்தவொரு நினைவுச் சின்னங்களோ அல்லது கட்டிடங்களோ இல்லை என்றும், ஆனால் இலங்கையில் பாடசாலைகளுக்குச் சென்றால் கூட முன்னாள் அரசியல்வாதிகளின் பெயர்களே பொறிக்கப்பட்டுள்ளதாகவும் ஒப்பீட்டுக் கூறினார்.

தற்போது அரசாங்கத்தை நடத்தும் ஒரு கட்சியாக மாறியுள்ள சூழலில், எளிமையான வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு பிடலின் வாழ்க்கை முறையே சிறந்த வழிகாட்டியாகும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.









Post a Comment