வரலாற்றில் முதன்முறையாக இரு தமிழ் கழகங்கள் மோதிய ‘பிக் மேட்ச்’ கிரிக்கெட் சமர்: கொழும்பு முத்துவெல மைதானத்தில் விமரிசையாக நிறைவு

இலங்கை விளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாகவும், தலைநகர தமிழ் விளையாட்டுக் கழகங்களின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாகவும், இரு தமிழ் விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க 'பிக் மேட்ச்' (Big Match) கிரிக்கெட் போட்டியின் நிறைவு நிகழ்வு கொழும்பு 15 முத்துவெல மைதானத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.

கொழும்பில் பாடசாலைகளுக்கு இடையே 'பிக் மேட்ச்' போட்டிகள் நடைபெறுவது வழக்கமான ஒன்று என்ற போதிலும், இரு தமிழ் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே இத்தகைய பிரம்மாண்ட விளையாட்டுச் சமர் நடைபெறுவது இலங்கை வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும்.

கொழும்பு ஜனனம் விளையாட்டுக் கழகம் மற்றும் விபுலானந்தா விளையாட்டுக் கழகம் ஆகிய இரு சிறந்த திறமைமிக்க அணிகள் மோதிய இப்போட்டியில், இளம் வீரர்களின் விளையாட்டு ஆற்றலும், ஒற்றுமையும், திறமையும் வெளிப்பட்டன. இரு அணிகளும் தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், இறுதிவரை கடுமையான போட்டி நிலவி, ஆட்டம் வெற்றி–தோல்வியின்றி சமநிலையில் (Draw) நிறைவடைந்தது.

இப்போட்டியை பயிற்சியாளர் அசோக் மற்றும் விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் இணைந்து மிகச் சிறப்பான முறையில் திட்டமிட்டு வழிநடத்தியிருந்தனர்.

அணிக்கு 40 ஓவர்கள் ஒதுக்கப்பட்டு 'ஒருநாள் டெஸ்ட்' (One-Day Test) வடிவத்தில் நடத்தப்பட்ட இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய விபுலானந்தா அணி, எதிரணியின் பந்துவீச்சை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ஓட்டங்களைக் குவித்தது. அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் கிருத்திக் கிருஷ்ணன் 67 பந்துகளில் 68 ஓட்டங்களையும், ஆர். அரிசுதன் 75 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களையும் பெற்றனர். 

ஜனனம் அணி சார்பில் பந்துவீச்சில் ஐ. ஜெரூன் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், எஸ். சாஷ்விக் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் 235 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஜனனம் கிரிக்கெட் கிளப் அணி, வலுவான பந்துவீச்சை எதிர்கொண்டு நிதானமாக ஆடியது. ஜனனம் அணி சார்பில் வி. ஹரிஷ் 77 பந்துகளில் 32 ஓட்டங்களையும், ஐ. ஜெரூன் 19 பந்துகளில் 9 ஓட்டங்களையும் பெற்றனர். விபுலானந்தா அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய திவான் தீபக் 39 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ஆர். அரிசுதன் 9 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். போட்டி நேர முடிவில் ஜனனம் அணி 40 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், போதிய நேரமின்மை மற்றும் இருள் காலநிலை காரணமாக இப்போட்டி சமநிலையில் (Match Drawn) முடிவடைந்தது.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக (Player of the Match) 4 விக்கெட்டுகளை வீழ்த்திய திவான் தீபக் தேர்வானார்.

இந்நிகழ்வின் பரிசளிப்பு விழாவில் ஜனனம் அறக்கட்டளை மற்றும் ஜனனம் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகரும், IDMNC சர்வதேச பல்கலைக்கழகம் மற்றும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். மேலும் கொழும்பு மாநகரசபையின் விளையாட்டு உத்தியோகஸ்தர் திரு. சஞ்சீவ், IDMNC நிறுவனத்தின் உயரதிகாரிகள், பயிற்றுவிப்பாளர்கள், முகாமையாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பரிசளிப்பு விழாவில் சிறப்புரையாற்றிய கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி, கொழும்பு போன்ற பெருநகர சூழலில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கவனச்சிதறல்களில் சிக்கிவிடாமல் தடுப்பதற்கு விளையாட்டுத்துறை மிகவும் அவசியமானது எனக் குறிப்பிட்டார். இளைஞர்களை நல்வழிப்படுத்தி ஒன்றிணைக்கும் ஆற்றல் விளையாட்டுக்கே உண்டு என்பதைக் கருத்தில் கொண்டே ஜனனம் அறக்கட்டளை சார்பில் இவ்விளையாட்டுக் கழகம் உருவாக்கப்பட்டது என்றும், பயிற்சியாளர் அசோக் அவர்களின் தலைமையில் இக்கழகம் தொடர்ந்து இயங்கி வருவதாகவும் தெரிவித்தார். அத்துடன், கடந்த இரண்டு நாட்களாக அர்ப்பணிப்புடன் விளையாடிய வீரர்கள், பெற்றோர் மற்றும் அமைப்பாளர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த அவர், விளையாட்டுத்துறையை மேலும் வளர்த்தெடுப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ச்சியாக வழங்குவதாக உறுதியளித்தார்.

நிகழ்வின் இறுதியில், சிறப்பு விருந்தினர்கள் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்களுக்கு பதக்கங்களையும் வெற்றிக்கிண்ணங்களையும் வழங்கி கௌரவித்தனர். அத்துடன் இந்த நிகழ்வின் போது ஜனனம் அறக்கட்டளையின் சார்பில் முத்துவெல விளையாட்டு மைதானத்திற்கு கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தியின் கரங்களால் புல்வெட்டும் இயந்திரம் ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

தலைநகர தமிழ் கழகங்களுக்கு இடையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விளையாட்டு சமரானது இத்துடன் முடிந்துவிடாமல், வருங்காலங்களிலும் தொடர்ந்து ஆண்டந்தோறும் நடைபெற வேண்டும் என்ற விருப்பத்தினை நிகழ்வில் கலந்துகொண்ட அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.









Post a Comment