தமிழீழத்தின் இறுதி மன்னன் பண்டார வன்னியனை மொனராகலை மாவட்டத்தில் வாழும் சிங்களவர்கள் வன்னி பண்டார தெய்யோ என்ற பெயரில் புத்த கோவில்களில் வழிபட்டு வருகின்றனர்.
ஆங்கிலேய கிழக்கிந்திய கொம்பனியின் முற்றுகையை உடைத்து 31.10.1803 அன்று வன்னியை விட்டு வெளியேறிய பண்டார வன்னியன், கண்டி இராச்சியத்தை ஆண்ட தமிழ் மன்னனான கண்ணுச்சாமி (சிறீவிக்கிரமராஜசிங்கன்) அவர்களின் உதவியுடன் மொனராகலையில் தளம் அமைத்து அங்கிருந்தவாறு ஆங்கிலேயப் படைகளிக்கு எதிராகப் போராடியுள்ளார்.
இதன்போது மொனராகலையில் ஆங்கிலேயப் படைகள் மேற்கொண்ட பல்வேறு ஊடுருவல்களைப் பண்டார வன்னியன் முறியடித்ததோடு, அதன் மூலம் அங்குள்ள சிங்களக் கிராமவாசிகளின் காவலனாகவும் போற்றப்பட்டு வந்துள்ளார்.
கற்சிலைமடுவில் ஏறத்தாள ஒரு நூற்றாண்டு கழித்து நிறுவப்பட்ட நடுகல் ஒன்றில் 31.10.1803 அன்று பண்டார வன்னியனை ஆங்கிலேய கிழக்கிந்திய கொம்பனியின் தளபதியான கப்டன் Von Driberg தோற்கடித்ததாக குறிப்பிடப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு 1803ஆம் ஆண்டு பண்டார வன்னியன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டதாக பரவலாக கருதப்பட்ட போதும், 1810ஆம் ஆண்டு மொனராகலையில் ஆங்கிலேயப் படைகள் நிகழ்த்திய பதுங்கித் தாக்குதல் நடவடிக்கை ஒன்றில் விழுப்புண்ணெய்திப் பண்டார வன்னியன் வீரச்சாவை எய்தியதாக பின்வந்த கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆங்கிலேயப் படைகளிடம் இருந்தும், காட்டு விலங்குகளிடம் இருந்தும் தம்மைப் பண்டார வன்னியனும், அவரது படை வீரர்களும் பாதுகாத்து வந்ததால் அவரது வீரச்சாவின் பின்னர் அவரை வன்னி பண்டார தெய்யோவாக (தெய்வமாக) மொனராகலையைச் சேர்ந்த சிங்கள மக்கள் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருகின்றனர்.
இப் பதிவில் நீங்கள் பார்க்கும் படம் புத்த கோவில் ஒன்றில் உள்ள பண்டார வன்னியனின் ஓவியமாகும்.
