அழகுக்கலை போட்டியில் வடக்கைச் சேர்ந்த இருவர் வெற்றி பெற்று மகுடம் சூடினர்.

 தேசிய ரீதியில் இருபாலருக்கும் தனித்தனியாக நடாத்தப்பட்ட அழகுக்கலை போட்டியில் வடக்கைச் சேர்ந்த இருவர் வெற்றி பெற்று மகுடம் சூடினர்.

இது தொடர்பில் போட்டி ஏற்பாட்டாளர்கள் யாழ் ஊடக அமையத்தில் இன்று  ஊடக சந்திப்பை நடத்தி தெளிவுப்படுத்தினர்.

'ஸ்ரைலோ ராமி மொடல்' அக்கடமியின் ஏற்பாட்டில் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட அழகுக் கலைப் போட்டியின் இறுதிப் போட்டி யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

சர்வதேச தரத்தில் நடைபெற்ற போட்டியில் இத்தாலி, இந்தியா,ஸ்பெயின் மற்றும் இலங்கையைச் சேர்ந்த பிரபல அழகுக்கலை சார்ந்தோர் நடுவர்களாகப் பங்கேற்று, போட்டியாளர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் மதிப்பீடுகளையும் வழங்கினர்.

தேசிய ரீதியில் கலந்துகொண்ட பல போட்டியாளர்களிடமிருந்து இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 24 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் இருவர் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டனர்.

ஆண்களுக்கான பிரிவில் கிளிநொச்சியைச் சேர்ந்த சந்திரகுமார் கிசோக்குமாரும், பெண்களுக்கான பிரிவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயரூபன் சியானாவும் மகுடம் சூடினர்.

இறுதிச் சுற்றில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தங்களின் தனித்துவமான  திறன்கள், ஆடை அலங்காரப் பாணிகள் மற்றும் தலைமுடி ஒப்பனை நுட்பங்கள் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தனர்.

நவீன அழகுக்கலை உலகில் எமது பாரம்பரிய கலை மற்றும் கலாசாரப் பண்பாடுகளை எவ்விதச் சிதைவுமின்றிப் பாதுகாக்கும் வகையிலும், திறமையாளர்களுக்குச் சர்வதேச அளவிலான ஒரு சிறந்த மேடையை அமைத்துக்கொடுக்கும் நோக்கிலும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

யாழ்ப்பாணத்தின் அழகுக்கலை மற்றும் பேஷன்  துறையில் ஒரு புதிய மைல்கல்லாக அமைந்த இந்நிகழ்வு உள்ளூர் திறமையாளர்களை உலக அரங்கிற்கு அறிமுகப்படுத்தும் படியமையாகவும்  அமைந்தது என தெரிவித்தனர்.












Post a Comment