நுவரெலியாவில் காது கடித்த சம்பவம் நடவடிக்கை இல்லை என குற்றசாட்டு மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை

நுவரெலியா சீத்தாஎலிய போலகந்த பகுதியில் நில தகராறு காரணமாக பெண்ணொருவரின் காதை கடித்த நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் தவறியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நுவரெலியா பிரதேச செயலாளருக்கு பரிந்துரைகளை அனுப்பியுள்ளது

சீத்தாஎலியவை சேர்ந்த நோனா பட்டோன் என்பவரின் காணிக்கு முன்னால் உள்ள பாதையை பயன்படுத்துவது தொடர்பில் கடந்த மார்ச் 4 ஆம் திகதி அயலவர்களுடன் ஏற்பட்ட தகராறின்போது அவரது காது கடிக்கப்பட்டு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் பொலிஸாரும் கிராம உத்தியோகத்தரும் ஒருதலைபட்சமாக செயல்பட்டு மத அடிப்படையில் பாரபட்சம் காட்டி சந்தேக நபருக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட தரப்பு குற்றம் சாட்டியுள்ளது

இதனை அடுத்து United Human Rights Organization அமைப்பு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தது குறித்த முறைப்பாட்டை விசாரித்த ஆணைக்குழு 1996 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் நுவரெலியா பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகளின் அணுகுமுறை தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது

இதன் தொடர்ச்சியாக கடந்த ஜூலை 31 ஆம் திகதி நுவரெலியா பிரதேச செயலாளருக்கு ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது சம்பவம் நடந்து ஆறு மாதங்களை நெருங்கியும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என அந்த அமைப்பின் பணிப்பாளர் பிரணீதா வர்ணகுலசூரிய தெரிவித்தார்

அரச அதிகாரிகள் எந்தவித மத பாகுபாடும் இல்லாமல் வெளிபடையான நியாயமான விசாரணையை முன்னெடுத்து உடனடியாக நீதி வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது



Post a Comment