கட்டுமான பொருட்கள் இணைய விற்பனை மோசடி பொலிஸார் எச்சரிக்கை

கட்டுமான பொருட்களை இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்வதாக கூறி பண மோசடியில் ஈடுபடும் கும்பல் ஒன்று இயங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோசடி கும்பல் அஸ்பெஸ்டாஸ் சீமெந்து உள்ளிட்ட பொருட்களை சந்தை விலையை விட குறைவாக தருவதாக விளம்பரம் செய்து ஆர்டர்களை பெறுகிறது. 

ஆர்டர் கிடைத்தவுடன் வாடிக்கையாளர் வசிக்கும் பகுதியில் உள்ள கட்டிட பொருள் விற்பனையாளர் ஒருவர் மூலம் அந்த முகவரிக்கு பொருட்களை அனுப்பி வைக்கின்றனர்.

பொருட்கள் முகவரிக்கு சென்றடைந்ததும் மோசடிக்காரர்கள் வாடிக்கையாளரை தொடர்பு கொண்டு பணத்தை தங்கள் வங்கி கணக்கிற்கு உடனே வைப்பு செய்யுமாறு கூறுகின்றனர்.

ஆனால் பொருட்களை கொண்டு வந்த சாரதி பணம் கேட்கும் போது தான் வாடிக்கையாளர் ஏமாற்றப்பட்டதை உணருகிறார். அதற்குள் மோசடிக்காரர்கள் தொடர்பை துண்டித்து விடுகின்றனர்.

இது போன்ற முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன. எனவே இணையம் மூலம் பொருட்கள் வாங்கும் போது மிகுந்த அவதானமாக இருக்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.



Post a Comment