இலங்கை தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் முதல் தலைவராக குசல் மென்டிஸ்

 

இலங்கை தொழில்முறை கிரிக்கெட் வீரர்களின் சுதந்திரமான மற்றும் கூட்டு அமைப்பாகச் செயல்படும் நோக்கில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இலங்கை தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் முதல் தலைவராக, இலங்கை அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணித்தலைவர் குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

சனிக்கிழமை (08) அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்புக்கு, பெண்கள் அணித்தலைவி சமரி அத்தபத்து மற்றும் சகலதுறைவீரர் வனிந்து ஹசரங்க போன்ற முன்னணி நட்சத்திரங்களின் பலத்த ஆதரவு கிடைத்துள்ளது.

இலங்கையிலுள்ள தொழில்முறை கிரிக்கெட் வீரர்களின் நலன் மற்றும் உரிமைகளுக்காக சுயாதீனமாக குரல் கொடுக்கும் அமைப்பாக இச்சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இச்சங்கம், தொழில்முறை கிரிக்கெட் வீரர்களுக்கான சர்வதேசக் கூட்டமைப்பான உலகக் கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துடன் நேரடியாக இணைந்துள்ளது.

இந்த இணைப்பின் வெளிப்பாடாக, அத்தபத்து, நடப்பாண்டின் தொடக்கத்தில் உலக கிரிக்கெட் வீரர்கள் சங்க வீரர்கள் ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டார்.

இதற்கு முன்பு வரை, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் இணைந்து, உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்காத அல்லது அதில் இணையாத சில முன்னணி கிரிக்கெட் சபைகளில் ஒன்றாக இலங்கை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment