அநுராதபுரத்திலுள்ள ஒரேயொரு தமிழ் பாடசாலையையும் ஆக்கிரமிக்க திட்டம்

 

அநுராதபுரத்தில் அமைந்துள்ள விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலய பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரேயொரு தமிழ் பாடசாலை விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், 

1944 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலையின் நிலப்பரப்பு, காலத்துக்கு காலம் பல்வேறு அரச நிறுவனங்களின் பயன்பாட்டிற்காகக் கையகப்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், பாடசாலை அதிபரின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள பகுதி உட்பட சுமார் ஒரு ஏக்கர் காணியை, அநுராதபுரம் வலயக் கல்வி அலுவலகத்தின் கட்டடமொன்றை அமைப்பதற்காகக் கையகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாடசாலை நிர்வாகத்திற்கோ, பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்கோ அல்லது அதிபருக்கோ எவ்வித முன் அறிவித்தலும் வழங்கப்படாமல், பாடசாலை வளாகத்துக்குள் நுழைந்து குறித்த காணியை திடீரென சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து வட மத்திய மாகாண ஆளுநரைச் சந்தித்து அமைதியான முறையில் மனு ஒன்றை கையளித்துள்ளனர்.

ஏற்கனவே பாடசாலையின் கணிசமான காணிகள் வேறு அரச நிறுவனங்களால் பெறப்பட்டுள்ளதால், எஞ்சியுள்ள காணியை வேறு தேவைகளுக்குக் கையகப்படுத்தக் கூடாது எனவும், மாணவர்களின் எதிர்காலக் கல்வி வளர்ச்சி மற்றும் கட்டட விரிவாக்க நடவடிக்கைகளுக்காக இந்த காணியைப் பாதுகாத்துத் தருமாறும் அவர்கள் சமர்ப்பித்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment