மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படும் அபாயம் காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான அவசர எச்சரிக்கை இன்று (06.08.2026) காலை 10.00 மணியளவில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இந்தக் கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
எனவே, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை மேற்கூறிய கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என மீனவ மற்றும் கடற்படை சமூகங்களுக்குக் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து காங்கேசன்துறை, புத்தளம், திருகோணமலை, கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், இந்தக் கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
எனவே, குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் ஏனைய கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறும், தேவையற்ற கடற்பயணங்களைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
