அமெரிக்காவில் வாடகை தாய் முறை தொடர்பான வழக்கு ஒன்று பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. குழந்தைக்கு குறைபாடு இருப்பதாக தெரிவித்து பெற்றோர் கருக்கலைப்பு கேட்ட நிலையில், வாடகை தாய் அதனை ஏற்காமல் குழந்தையை தானே வளர்ப்பேன் என நீதிமன்றம் சென்றுள்ளார்.
கலிபோர்னியாவை சேர்ந்த ஓமர் அகமது மற்றும் நெளஷீன் கில்கர் தம்பதி, செவிலியரான மெக்கென்னா வெஸ்ட்டை வாடகை தாயாக நியமித்தனர். இருவருக்கும் இடையிலான ஒப்பந்தத்தில், கருவில் குறைபாடு கண்டறியப்பட்டால் அதனை நீக்க ஒப்புக்கொள்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
20 ஆவது வார பரிசோதனையில் கருவில் உள்ள குழந்தைக்கு பிறவி இதய நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இடது பக்க இதய வளர்ச்சி பாதிக்கப்பட்டு, பிறந்ததும் உடனடி அறுவை சிகிச்சை தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து தம்பதியினர் கருவை கலைக்குமாறு வாடகை தாயிடம் கோரினர். ஆனால் அவர் அதற்கு உடன்படவில்லை. டெக்சாஸில் கருக்கலைப்புக்கு சட்ட தடை இருப்பதால் வேறு இடத்திற்கு செல்ல முயன்று, பின்னர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பிறந்த குழந்தைக்கும் அதே இதய பிரச்சனை இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதன்பின் குழந்தையுடன் டெக்சாஸை விட்டு செல்ல முயன்ற வாடகை தாயை தடுக்கும் நோக்கில், உயிரியல் பெற்றோர் நீதிமன்றத்தை நாடினர். நாங்கள் கருக்கலைப்பை வற்புறுத்தவில்லை என்றும், இது அரசியல் ரீதியாக திசை திருப்பப்படுகிறது என்றும் அவர்கள் வாதிட்டனர்.
வழக்கை விசாரித்த டெக்சாஸ் நீதிமன்றம், வாடகை தாய் மாகாணத்தை விட்டு வெளியேற கூடாது என தடை விதித்தது. அதே நேரம் குழந்தைக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டது. இறுதியில் குழந்தையின் சட்டபூர்வ பொறுப்பு உயிரியல் பெற்றோருக்கே உரியது எனவும், வாடகை தாய்க்கு அதிகாரம் இல்லை எனவும் நீதிமன்றம் தீர்பு வழங்கியது.
இந்த தீர்பு வாடகை தாய் முறையில் உள்ள ஒப்பந்தம் மற்றும் தார்மீக உரிமைகள் குறித்த புதிய விவாதத்தை தொடங்கியுள்ளது.
