ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருந்து கொண்டு இலங்கை மற்றும் உலகின் பிற பகுதிகளில் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வந்த முக்கிய போதைப்பொருள் விநியோகஸ்தரும் வர்த்தகருமான முகமது ஷிரான் பாசிக் அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தெஹிவளை கலுபோவில பகுதியை வதிவிடமாகக் கொண்ட ஷிரான் பாசிக்இ 48 வயதுடையவராவார்.
இவர் சர்வதேச பொலிசாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டவராவார்.
கடந்த ஈரான் - அமெரிக்க போரின் போது ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஈரான் பயன்படுத்திய ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை தனது மொபைல் போனில் வைத்திருந்தமைக்காக அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன் அவரைப்பற்றிய விசாரணை நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவும் அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றிருந்த நிலையில் ஓகஸ்ட் 14 ஆம் திகதி இரவு 08.48 மணியளவில் ஏர் அரேபியா விமான சேவையின் 3.டு-708 இலக்க விமானம் மூலம் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதைத் தொடர்ந்து அவரைப் பற்றிய மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படவுள்ளார் என எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
