அமைச்சர் ஒருவரின் திடீர் முடிவு

கண்டி மாவட்டத்திலிருந்து மீண்டும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்ந்து அதிகாரத்தில் நிலைத்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே லால் காந்த மேற்கண்டவாறு தெரிவித்தார். 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அண்மைய கருத்துக்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். 

அதாவது, தான் எந்தவொரு அதிகாரத்திலும் காலவரையறையின்றி நீடிக்கும் நோக்கத்துடன் பதவியேற்கவில்லை என்றும், தனது பதவியை இழக்க நேரிட்டாலும் அரசியல் ரீதியான சவால்களை எதிர்கொள்ளத் தயார் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் கருத்துக்களுக்கும், தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்கும் என்ற தனது கூற்றுக்கும் இடையில் எந்தவித முரண்பாடும் இல்லை என லால் காந்த விளக்கமளித்தார்.

ஒரு அரசியல் இயக்கத்தின் அல்லது அரசாட்சியின் தொடர்ச்சியும், ஒரு நபர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதும் இரண்டு வெவ்வேறு விடயங்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, கண்டி மாவட்டத்திலிருந்து மீண்டும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற தனது முடிவை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகாரத்தை இழந்துவிடும் என்பதற்கான அறிகுறியாகப் பார்க்கக் கூடாது என லால் காந்த மேலும் தெரிவித்தார்.

Post a Comment