காணி உரிமையுடன் புதிய வீடுகள்-வெளியான மகிழ்ச்சி தகவல்

“மலையக மகிழ்ச்சியின் புதிய தொடக்கம்“50 குடும்பங்களுக்கு காணி உரித்துடன் புதிய வீடுகள்

தேசிய மக்கள் சக்தி ஆட்சியானது, மலையக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை, வழங்கி வருவதாகத் தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்,  “மலையக மகிழ்ச்சி ஊடாக, இதனை பெற்று கொடுக்கும் நடவடிக்கையை எமது அரசாங்கம், முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

நேற்று (19)  பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிதிச் சட்டத்தின் கீழான சிரம வாசனா நிதியத்தை கலைத்தல் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“2023ஆம் ஆண்டு கபரகல பகுதியில் ஏற்பட்ட மண் சரிவினால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய வீடுகளை கட்டி முடித்துள்ளதுடன், எதிர்வரும் 28ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் அந்த வீடுகள் மக்கள் உரிமையாக்கப்படவுள்ளன.. ஒவ்வொரு வீட்டுக்கும் 28 லட்ச ரூபாயும், உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 4 லட்ச ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வீட்டு திட்டத்தில் முறையான பாதைகள், வடிகால் அமைப்பு, காணி உரித்து, தனியான முகவரி, தபால் பெட்டி, நீர் தாங்கிகள், பாதுகாப்பு மதில் மற்றும் சூரிய சக்தி மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மலையக பாடசாலைகளுக்கு காணி உரிமை வழங்குதல், ஆசிரியர் பற்றாக்குறையை தீர்த்தல், பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கத்தின் பொறுப்பில் கொண்டு வந்து சுகாதார சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

Post a Comment