வியட்நாம் ஏர்லைன்ஸ் (Vietnam Airlines) நிறுவனம், ஹோ சி மின் நகரின் (Saigon) டான் சன் நட் சர்வதேச விமான நிலையத்திற்கும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் (BIA) இடையே தனது நேரடி விமான சேவையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
இதன் முதலாவது விமானம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது, விமானப் போக்குவரத்து, சுற்றுலாத் துறை மற்றும் இராஜதந்திர பிரதிநிதிகளின் பங்கேற்புடன் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.
இரு நாடுகளுக்குமிடையிலான வான்வழித் தொடர்பை வலுப்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்புதிய சேவையின் கீழ் வாரத்திற்கு மூன்று நேரடி விமானங்கள் இயக்கப்படவுள்ளன.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், வர்த்தகப் பயணங்களை எளிதாக்கி, இருதரப்பு உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை சுற்றுலாத்துறையின் முக்கிய சந்தைகளில் ஒன்றாக வியட்நாம் திகழும் நிலையில், இச்சேவை சரியான தருணத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
ஹேலிஸ் (Hayleys PLC) குழுமத்தின் துணை நிறுவனமான 'அட்வாண்டிஸ் - ஏவியேஷன் சர்வீசஸ்' (Advantis - Aviation Services), 2019 முதல் இலங்கையில் வியட்நாம் ஏர்லைன்ஸின் பொது விற்பனை முகவராக (GSA) செயற்பட்டு வரும் நிலையில், இந்த நேரடி விமான சேவை மூலம் இரு நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டாண்மை அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
அட்வாண்டிஸ் நிறுவனத்தின் பரந்த சந்தை அனுபவம் மற்றும் விநியோகக் கட்டமைப்பு என்பன இச்சேவையின் வெற்றிக்கு உறுதுணையாக அமையும்.
இலங்கையிலுள்ள வியட்நாம் தூதுவர் திரிஞ் தி தம் (Trinh Thi Tam) கருத்துத் தெரிவிக்கையில், இந்த நேரடி விமான சேவை இரு நாடுகளையும் மேலும் நெருக்கமாக்கவும், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கவும் சிறந்த வாய்ப்பாக அமையும் எனக் குறிப்பிட்டார்.
அதேபோல், அட்வாண்டிஸ் குழுமத்தின் மேலாண் இயக்குநர் ருவன் வைத்யரத்ன தெரிவிக்கையில், கடந்த பல ஆண்டுகளாகச் சீராக வளர்ந்து வரும் இருதரப்பு கூட்டாண்மையின் பலத்தை இச்சேவை பிரதிபலிக்கிறது எனத் தெரிவித்தார்.
இப்புதிய சேவை மூலமாக வியட்நாமிய பயணிகள் இலங்கைக்கு சுலபமாக வருகை தர முடிவதுடன், இலங்கைப் பயணிகள் வியட்நாம் ஏர்லைன்ஸின் பரந்த வான்வழி வலையமைப்பு வழியாக பிற நாடுகளுக்கும் தடையின்றிப் பயணிக்க முடியும்.
மேலதிக தகவல்களுக்கு +94 112 666 444 என்ற தொலைபேசி இலக்கத்தையோ அல்லது www.advantis.world என்ற இணையதளத்தையோ தொடர்பு கொள்ளவும்.
