போதைப்பொருள் ஒழிப்பில் முப்படையினர் மற்றும் காவல்துறையின் பங்களிப்பு குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு

இலங்கையை போதைப்பொருளற்ற நாடாக்கும் "ரட்டம எக்கட்ட" (நாடு ஒன்றாக) தேசிய செயற்திட்டத்தின் கீழ் முப்படையினர் மற்றும் இலங்கை காவல்துறையின் பங்களிப்பு மற்றும் அதன் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (13) "ரட்டம எக்கட்ட" தேசிய செயற்திட்டத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ஊடக மையத்தில் நடைபெற்றது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் வருண கமகே, இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் சமிந்த வளாக்குளுகே, இலங்கை விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் நலின் வெவக்ஹும்புர, இலங்கை காவல் துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல் துறை அத்தியட்சகர் எஃப்.யு.கே. வூட்லர் மற்றும் போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு விசேட பிரிவின் பணிப்பாளர் உதவி காவல் துறை அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

அனைத்து பாதுகாப்புப் பிரிவினரதும் கூட்டுப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் இந்த போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை அழிப்பது இச்செயற்திட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாகும் என காவல் துறை ஊடகப் பேச்சாளர் இங்கு சுட்டிக்காட்டினார்.

 இதற்கமைய, 2024 ஆம் ஆண்டு முதல் கடந்த சுமார் மூன்று ஆண்டுகாலப் பகுதியில் 4,652 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன என்றும், இதில் 2026 ஆம் ஆண்டில் மட்டும் 2,168 கிலோகிராமும் 387 கிராமும் கொண்ட போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment