இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய நிலையில் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள, 93 சந்தேக நபர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக சர்வதேச காவல்துறை ஊடாக சிவப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும், உதவி காவல்துறை அதிபருமான எப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இன்று (13) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த காவல்துறை ஊடகப் பேச்சாளர், 2024, 2025 மற்றும் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இந்த சிவப்பு அறிவித்தல்கள் ஊடாக 38 சந்தேக நபர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், காவல்துறை மா அதிபரின் நேரடித் தலையீட்டின் கீழ் பிரதான மற்றும் பெயர் குறிப்பிட்ட குற்றவாளிகள் 35 பேரை நாட்டுக்கு அழைத்துவர முடிந்துள்ளது என்பதையும் அவர் மேலும் வெளிப்படுத்தினார்.
இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட சந்தேக நபர்களால் சட்டவிரோதமான முறையில் உழைக்கப்பட்ட வாகனங்கள், வீடுகள், தங்கம் மற்றும் நிலங்கள் உள்ளிட்ட பெருமளவு சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்று தற்போது நடைமுறையில் உள்ளது.
இதற்கமைய, 2024 ஆம் ஆண்டில் 1,490 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களும், 2025 ஆம் ஆண்டில் 1,549 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களும் அரச உடமையாக்குவதற்கான ஆரம்ப கட்டமாக அந்தச் சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 839 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரச வசமாக்குவதற்கான ஆரம்ப சட்ட முன்னெடுப்புகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
