இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில்; இலங்கையில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மொத்தம் 1,693 பேர் உயிரிழந்துள்ளனர்.
போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான காவல்துறை துணைப் பரிசோதகர் டபிள்யூ.பி.ஜே. சேனதீரா, இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசுகையில்,
2026 ஆம் ஆண்டில் இது வரை நாடு முழுவதும் மொத்தம் 1,605 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
இதுவரை 3,125 தீவிர விபத்துக்களும், 6,477 சிறிய விபத்துக்களும், 2,388 சொத்துச் சேதங்களை ஏற்படுத்திய விபத்துக்களும் பதிவாகியுள்ளதாக சேனதீரா கூறினார்.
உயிரிழந்தவர்களில் 555 பாதசாரிகளும் 603 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், 119 மோட்டார் சைக்கிளில்; பின்னாடி அமர்ந்து பயணிப்போரும், 115 மிதிவண்டி ஓட்டுநர்களும், 136 வாகன ஓட்டுநர்களும், 162 பயணிகளும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு இதுவரை பதிவாகியுள்ள சாலை விபத்துக்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது என சேனதீரா குறிப்பிட்டுள்ளார்.
