தமிழ் மக்களின் உரிமைகளையும் அபிவிருத்தியையும் புறக்கணிக்கிறது

 

சிறுபான்மையினரின் ஆதரவால் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தமிழ் மக்களின் உரிமைகளையும் அபிவிருத்தியையும் புறக்கணிக்கிறது: கலாநிதி சுரேன் ராகவன் குற்றச்சாட்டு

இன்றைய தினம் (17) கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் வடமாகாண ஆளுநருமான கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

தற்போதைய அரசாங்கம் சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பேராதரவுடனேயே ஆட்சிக்கு வந்தது என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இருப்பினும், ஆட்சிக்கு வந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்த மக்களிடம் இருந்த நம்பிக்கையும் ஆதரவும் படிப்படியாகக் கரைக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதும், காலையில் உடற்பயிற்சி செய்வதும், மக்களிடம் தமிழில் "போயிட்டு வாரேன்" என்று பேசுவதும் வரவேற்கத்தக்க நல்ல விசயங்கள்தான். ஆனால், தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மையினரின் ஆழமான அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் போதிய அக்கறை காட்டாமல் மௌனம் சாதித்து வருகிறது.

குறிப்பாக, யாழ்ப்பாணத்தின் குடிநீர் பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. சர்வதேச விமான நிலையத்தின் ஓடு பாதையை விரிவாக்கும் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. 

உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட 420 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் நாட்டிலேயே மிகப்பெரிய அளவிலான மீன்பிடித்துறை திட்டங்கள் வடக்கில் தொடங்கப்படவிருந்த நிலையில், அவை ஏன் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. 

மன்னார் அபிவிருத்திப் பணிகள் மற்றும் இரணைமடு நன்னீர் வழங்கும் திட்டத்தின் வரைபடங்கள் கையளிக்கப்பட்டும் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை.

அதுமட்டுமன்றி, அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று உறுதியளித்த போதிலும், கடந்த 10 வருடங்களாக முடக்கப்பட்டிருக்கும் மாகாண சபை அதிகாரங்களை மீட்டெடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரத்திலும் கனடிய தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. தமிழ் மக்களுக்குத் தேவை வெறுமனே ஜனாதிபதியின் உடற்பயிற்சி நிகழ்வுகள் அல்ல; மாறாக அவர்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை உறுதி செய்வதற்கான தீவிரமான முதல் படிகளே ஆகும்.

அதேபோன்று, திட்வா சுறாவளியினால்  பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களில் சுமார் 35,000 பேர் இன்னமும் கூடாரங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். 

கண்டி-கொழும்பு புகையிரதப் பாதையில் 6 கிலோமீட்டர் தூரப் பகுதியைக்கூட சரிசெய்ய முடியாத அரசாங்கம், தமிழ் மக்களின் ஆழமான அரசியல் பிரச்சினையைத் தீர்க்கும் என்பதில் எந்த நம்பிக்கையும் இல்லை.

இறுதியாக, ஊடகவியலாளர்கள் வெறும் செய்திகளைத் தரும் அமைப்பாக மட்டும் இயங்காமல், உண்மைத் தன்மையை ஆராயும் "புலனாய்வு ஊடகவியலாளர்களாக" மாற வேண்டும்.


 அரசியல்வாதிகள் கூறுவதை அப்படியே எழுதாமல், அதன் பின்னணியை நுட்பமாக ஆராய வேண்டும். அதற்காக தமிழ் ஊடகவியலாளர்களுக்கு தேசிய அளவில் நிதி திரட்டி, சர்வதேச தரத்திலான பயிற்சிகளை வழங்க வேண்டியது அவசியமாகும்.

Post a Comment