பாடசாலை விடுமுறையில் பட்டம் விடும் போது கவனம் சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலை எச்சரிக்கை

பாடசாலை விடுமுறை காலத்தில் பட்டம் விடும் போது ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருவதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

வறண்ட வானிலை மற்றும் விடுமுறை காரணமாக தற்போது சிறுவர்கள் மத்தியில் பட்டம் விடுவது பிரபலமாகியுள்ளது. ஆனால் கவனக்குறைவாக பட்டம் விடுவதால் பலத்த காயங்கள் மற்றும் உயிரிழப்பு கூட ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக உயரமான இடங்களில் இருந்து பட்டம் விட முயற்சிக்கும் போது கீழே விழும் அபாயம் உள்ளது. குழுவாக பட்டம் விடும் போது ஒருவரோடு ஒருவர் மோதி கொள்வதாலும் விபத்துக்கள் நடக்கின்றன.

அத்துடன் உயர் அழுத்த மின்கம்பங்களுக்கு அருகில் பட்டம் விடுவது மிகவும் ஆபத்தானது. மின்கடத்தும் நூல்கள் மின்கம்பிகளில் படும்போது மின்சாரம் தாக்கி கைகள் தோள்பட்டை மார்பு பகுதியில் உள்ள திசுக்கள் நரம்புகள் இரத்த நாளங்கள் பாதிக்கப்படலாம். சில நேரங்களில் பாதிக்கப்பட்ட உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலையும் வரலாம். உடனடி உயிரிழப்பும் ஏற்படலாம்.

எனவே பெற்றோரும் பெரியவர்களும் சிறுவர்கள் மின்கம்பிகள் உள்ள இடங்களில் பட்டம் விடுவதை தவிர்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

சிறுவர்களின் பொழுதுபோக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவர்களின் உயிர் பாதுகாப்பும் முக்கியமானது. பட்டம் விடும் போது ஏற்படும் விபத்துக்களை தடுக்க சமூகம் முழுவதும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என வைத்தியர் பிரதீப் ரத்னசேகர மேலும் வலியுறுத்தினார்.

Post a Comment