காதலனால் கடத்தப்பட்ட யுவதி - விசாரணைகளில் வெளியான உண்மை

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட யுவதி ஒருவரைக் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியைப் பொலிஸார் நேற்று (29) முறியடித்துள்ளனர். இந்தக் கடத்தலை யுவதியின் காதலனே முன்னெடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். யுவதி ஒருவர் கார் ஒன்றில் கடத்திச் செல்லப்படுவதாக இன்று பிற்பகல் 01:30 மணியளவில் நாரஹேன்பிட்டி பொலிஸாருக்குத் தகவல் கிடைத்திருந்தது. அதற்கமைய உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், நாரஹேன்பிட்டியிலிருந்து நாவல நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்றை நிறுத்த முற்பட்டபோதிலும், அது பொலிஸாரின் கட்டளையை மீறி முன்னோக்கிச் சென்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. பின்னர், நாரஹேன்பிட்டி - நாவல வீதியில் வைத்து காரை நிறுத்துமாறு மீண்டும் சமிக்ஞை செய்தபோதிலும், அது நிறுத்தப்படாமல் முன்னோக்கிச் சென்றமையினால் பொலிஸார் காரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதன்போது சாரதி காரைக் கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், பொலிஸார் நடத்திய சோதனையின் போது, காரினுள் யுவதி ஒருவர் இருந்துள்ளார் என்றும், அவர் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து கடத்தப்பட்ட யுவதி என அடையாளங் காணப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், காரைச் செலுத்தியவர் கடத்தப்பட்ட யுவதியின் காதலன் எனத் தெரியவந்துள்ளது.

Post a Comment