இலங்கையில் எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்வு, காப்புறுதி மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்ததே இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் இறக்குமதிக்கான தற்போதைய செலவுகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் அரசாங்கத்திடம் புதிய மானியம் கோருவது அல்லது எரிபொருள் விலையை திருத்துவது உள்ளிட்ட மாற்று வழிகள் குறித்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான முழுமையான மீளாய்வு அடுத்த இரண்டு வாரங்களில் மேற்கொள்ளப்படும். முன்னர் அரசு வழங்கி பின்னர் நிறுத்திய 15 பில்லியன் ரூபா மானியத்தை மீண்டும் பெறுவது அல்லது நஷ்டத்தை ஈடு செய்ய விலையை திருத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.
கடைசியாக ஜூன் மாதம் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டு ஜூலையில் அமுலுக்கு வந்தது. இந்த மாதம் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதேநேரம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருண கூறுகையில், மேற்கு ஆசிய போர் தொடங்கிய பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது தற்போது எரிபொருள் விலை 48 சதவீதத்தால் அதிகரித்துள்ளது என்றார்.
இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டாலும், சர்வதேச விலை ஏற்றம் மற்றும் அதிகரித்த காப்புறுதி போக்குவரத்து கட்டணங்கள் பெரும் சவாலாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
