சிறைச்சாலைக்குள் மனித உரிமை மீறல்கள்: கொடூரத் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு; சாட்சியாளர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்!

 சிறைச்சாலைக்குள் ஆயுதங்களற்ற கைதிகள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அதிர்ச்சி தரும் தகவல்களை, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவினர் மற்றும் இச்சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியாளர் ஒருவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெளிப்படுத்தியுள்ளனர்.

 சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் பிரதிநிதி சுதேஷ் நந்திமால் தலைமையில் கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில், ஐஸ் போதைப்பொருள் வழக்கு தொடர்பாகச் சிறையில் அடைக்கப்பட்டு நேற்று விடுதலையான தில்ஷான் செனவிரத்ன என்ற நேரில் கண்ட சாட்சியாளர் கலந்துகொண்டு இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அவர் தெரிவிக்கையில், தாம் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென பலத்த சத்தம் கேட்டதாகவும், சிறைச்சாலை அதிகாரிகளும் வேறு சீருடை அணிந்த நபர்களும் பெயர் பட்டியலை ஏந்தியவாறு வார்ட்டுகளுக்குள் நுழைந்ததாகவும் குறிப்பிட்டார்.

கூண்டுகளின் பூட்டுகளை உடைத்து, பட்டியலிலிருந்த கைதிகளை வெளியே இழுத்து வந்து கொடூரமாகத் தாக்கியதாகத் தெரிவித்த அவர், சுமார் 45 பேர் இருந்த அந்த வார்ட்டில் அஸ்மான் என்பவரை உயிரிழக்கும் வரை அமாநுஷிகமாகத் தாக்கியதாகக் கூறினார்.

அத்துடன், தாக்குதலின் போது தனது நண்பனின் உடலில் இருந்து சிந்திய ரத்தத்தை தன் மீது பூசிக்கொண்டு, உயிர் இல்லாதவன் போல் நடித்து தாம் உயிர் பிழைத்ததாகவும் அவர் தனது கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

ரணசிங்க மற்றும் இசுரு என்ற அதிகாரிகளே பெயர்களை அழைத்துக்கொண்டு வந்து இந்தத் தாக்குதலை முன்னெடுத்ததாகச் சாட்சியாளர் பெயரிட்டுக் குற்றம் சாட்டியுள்ளார்.

 மேலும், சுமார் ஆயிரம் அதிகாரிகள் வரை சிறை வளாகத்திற்குள் இருந்ததாகவும், தங்களை மிதித்தும், இரும்புக் கம்பிகளால் தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார். இத்தாக்குதலுக்குப் பிறகு தீவிர காயமடைந்த கைதிகளுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், தற்போது வரை சிறைச்சாலை மருத்துவமனையில் சிலர் பலத்த காயங்களுடன் அவதிப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. 

இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யப் போதுமான ஆதாரங்கள் கைவசம் இருப்பதாகத் தெரிவித்த கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.



Post a Comment