அதிவேக வீதிகளிலும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதற்கமைய, எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக வீதிகளுக்குள பிரவேசிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆசனப்பட்டி அணியாமல் பயணிக்கும் நபருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிவேகப் பேருந்துகளில் ஆசனப்பட்டி அணியாத பயணிகளிடமிருந்தும் இந்த அபராதத் தொகையை அறவிடுவதற்கான சட்டப்பூர்வ வசதி உள்ளதாகத் தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல, ஆசனப்பட்டி அணிவதன் அவசியத்தை இலங்கை மக்கள் தீவிரமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், தேசிய வீதி பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன கருத்துத் தெரிவிக்கையில், ஆசனப்பட்டி இல்லாத வாகனங்களில் அவற்றை பொறுத்திக்கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலமும் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதியுடன் முடிவடடைவதாகத் தெரிவித்தார்.
கடந்த 2025 செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2455ஃ29 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, அதிவேக வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
